ஹோட்டல்களில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவில் உள்ள ஹோட்டல்களில் தங்கிய 1,600 பேரை இரகசியமாகப் படம்பிடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஒரு இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அந்தக் குறிப்பிட்ட இணையதளம் தங்களது வாடிக்கையாளர்களிடம் கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு இந்த வீடியோக்களை வழங்கியுள்ளது.

மேலும், லைவ்-ஸ்ட்ரீமிங் செய்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மாதக் கட்டண அடிப்படையில் அந்த இணையதளம் வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையதளத்தில் வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளது பொலிஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பொலிஸார் அளித்துள்ள முதற்கட்ட அறிக்கையில்,  ஹேர் டிரையர், சுவிட்சுகள் என அறைகளில் உள்ள பல்வேறு மின்சாதனப் பொருள்களில் இரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளனர். சிறிய அளவிலான விடுதிகளில்தான் இந்த வீடியோக்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுள்ளன.

10 நகரங்களில் உள்ள 30 ஹோட்டல்களில்,42 அறைகளில் ரகசிய கேமராக்களை வைத்துள்ளனர். இந்தக் கும்பல் இதுவரை 800-க்கும் அதிகமான வீடியோக்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் தென்கொரியா செல்லும் சுற்றுலாப் பயணிகளையும், அந்நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு 1,353 வழக்குகள் பதிவான நிலையில், 2017-ம் ஆண்டில் 6,470 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு ஏராளமான பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.