Full width home advertisement

Sri Lanka News

Climb the mountains

Post Page Advertisement [Top]


பிரபல தென்னிந்திய ஜோதிடர் ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி அவர்களினால் கணித்து வெளியிடப்பட்டுள்ள பெப்பிரவரி மாதம் - 2020 க்கான ராசி பலன்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


மேஷம்:

 பிப்ரவரி மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய், யோகாதிபதி குரு, இருவரும் ஒன்பதாமிடத்தில் இணைந்திருப்பது மேஷத்திற்கு யோகம் தரும் ஒரு அமைப்பு. இதனால் மேஷத்தினருக்கு உழைப்பிற்கேற்ற பணவரவு இருக்கும். சாதகமான கிரக அமைப்புகள் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும். ராசிக்கு குரு பார்வை இருப்பது இன்னுமொரு சிறப்பு என்பதோடு மாதத்தின் ஆரம்ப நாள் சூரியனும், சந்திரனும் கேந்திரமாக இருக்கும் நாளாக அமைவதால் இந்த மாதம் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரும். எதையும் முழுமையாகச் செய்ய முடியாமல் தயங்கித் தயங்கி தவித்துக் கொண்டிருந்த மேஷத்தினர் இப்போது நல்ல சூழ்நிலைகள் அமைவதை உணர்வீர்கள். இந்த வருடம் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடுகின்ற மாதமாக பிப்ரவரி இருக்கும். வீட்டிலும் வெளியிலும் சுபமான நிகழ்ச்சிகளும், மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். மேஷராசியின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விட்டன. உங்களில் சிலருக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனி இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். ராகுவின் இருப்பால் மூன்றாமிடம் வலுப் பெறுவதால் உங்களுடைய மனோ பலமும், எதையும் நேர்முகத்துடன் சந்திக்கும் தைரியமும் அதிகரிக்கும். இதுவரை சந்திக்கத் தயங்கிய பல விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். 3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி இரவு 11.18 முதல் 18-ம் தேதி அதிகாலை 5.13 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.


ரிஷபம்:

 மாத ஆரம்பத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் ராசியை பார்ப்பதால் ரிஷபராசிக் காரர்களுக்கு கோபத்தை உருவாக்கக் கூடிய நிகழ்வுகள் நடக்கும். எவ்வளவு நிதானமானவராக இருந்தாலும் கூட பொறுமையைக் கைவிடச் செய்யும் அளவிற்கு வம்புக்கு இழுக்கும் சம்பவங்களை சுற்றி இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் ரிஷபத்தினர் பேச்சிலும், செயலிலும் நிதானனமாக இருக்க வேண்டிய மாதம் இது. இது தவிர்த்து வேலை, தொழிலில் வேறு எந்தவித தொந்தரவுகளும் இருக்காது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் சுக்கிரன் உச்சமாக இருப்பது நல்ல யோகம் எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரிஷபத்தினர் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். ராசிநாதன் வலுப்பெறுவதால் பிப்ரவரி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம்தான். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று சொல்லுவேன். ராசினாதனே ஆறுக்குடையவனாகி பதினொன்றில் உச்சம் பெறுவது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது. சிலருக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு. சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். 1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி அதிகாலை 5.13 முதல் 20-ம் தேதி மதியம் 1.52 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.


மிதுனம்:

 இரண்டு சுபக்கிரகங்களான சுக்கிரனும், குருவும் வலுப்பெற்று, ஏழாமிட குரு ராசியைப் பார்ப்பதால் நீங்கள் தெளிவான மனதுடனும், முடிவெடுக்கும் திறனுடனும் இருக்கும் மாதம் இது. சனி எட்டில் அமர்ந்து இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களில் சிலரின் வருமானங்கள் குறைந்து நிதிநிலைமை பாதிக்கப்பட்டாலும் தனகாரகனான குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் குறைகள் எதுவும் இருக்காது. அஷ்டமச்சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு அதிர்ஷ்டத் தடைகளும், வர வேண்டிய தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச் சங்கடங்களும் இருக்கும். ராசிநாதன் வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி பறிக்கும் வேலைகள் நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம் வரும் நிலையில் அதிக கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார். வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரும் காலம் இது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அதிகப் பணம் முதலீடு செய்து தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. ராசியில் ராகு சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது. 2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம்தேதி மதியம் 1.52 முதல் 23-ம்தேதி அதிகாலை 12.29 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.


கடகம்:

 மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் சந்திரன் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் வளர்பிறை நிலையில், பூரண வலுவுடன் இருப்பதால் கடக ராசியினர் எதையும் சாதிக்கும் மாதம் இது. உங்களில் சிலர் இதுவரை முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை முடித்துக் காட்டி நல்ல பெயர் எடுப்பீர்கள். மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதிகள் குருவும், செவ்வாயும் இணைந்திருப்பதால் உங்களின் உடலும், உள்ளமும் சந்தோஷமாக இருக்கும். கடகத்திற்கு அனைத்து சிறப்புக்களும் இப்போது கிடைக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். உங்களுக்கு தோல்வி இல்லை. மாதத்தின் பாதி நாட்கள் குடும்பாதிபதி சூரியன்,. சனியுடன் இணைவதால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது. செவ்வாய் சுபத்துவமாகி ராசியைப் பார்ப்பதால் மனதில் தைரியம் இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நோய்கள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிக முயற்சி இல்லாமலே சுப காரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனி முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவர். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டவர்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள். அலுவலகங்களில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். 1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம்தேதி அதிகாலை 12.29 முதல் 25-ம்தேதி மதியம் 12.27 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.


சிம்மம்:

 ராசிநாதன் சூரியன். அவரது எதிரியான சனியுடன் நெருங்கி இருப்பதால் இந்த மாதம் முற்பகுதி வரை பிடிக்காத ஒருவருடன் ஒரே அறையில் இருப்பது போன்ற சங்கடமான நிலைமை சிம்ம ராசிக்காரர்களுக்கு இருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்க்க முடியாமல் இப்போது செய்ய வைக்கப்படுவீர்கள். மாத பிற்பகுதியில் இந்த நிலைமை மாறி ராசிநாதன் தனித்துவம் அடைவதால் பதினைந்தாம் தேதிக்கு மேல் அனைத்தையும் சீர்செய்து கொள்வீர்கள். மாதம் முழுவதும் யோகாதிபதியான செவ்வாய், குருவுடன் சேர்ந்திருப்பதால் கடந்த காலங்களில் உடலிலும், மனதிலும் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்கள் உற்சாகம் அடைவீர்கள். சிம்மத்தினர் இனிமேல் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட தொடங்குவீர்கள். ஐந்திற்குடைய குரு ஆட்சி பெறுவதால் பிள்ளைகளால் சந்தோசம் இருக்கும். எதையும் சாதிக்க முடியும் மாதம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை புத்துயிர் பெறும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடுவார்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். செவ்வாய், குரு வலுவாக உள்ளதால் சிலருக்கு திடீர் பணவரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். பொருட்கள் தங்காது. விற்றுத் தீர்ந்து விடும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதம்தான்.ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். 1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி மதியம் 12.27 முதல் 28-ம் தேதி அதிகாலை 1.08 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளைக் கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.


கன்னி:

 பிப்ரவரி மாத முன்பகுதியில் கன்னி ராசிக்கு சுணக்கமான பலன்கள் இருந்தாலும், யோகாதிபதி சுக்கிரன் 7-ம் இடத்திற்கு மாறி உச்ச நிலையில் ராசியை பார்க்கப் போவதால் பிற்பகுதியில் நீங்கள் சுறுசுறுப்பாகி அனைத்தையும் சாதிக்கின்ற மாதமாக இது இருக்கும். சிலருக்கு 20-ம் தேதிக்கு மேல் நல்ல மாற்றங்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடப்பதும் இருக்கும். எதிர்ப்புகளைக் குறிக்கும் கிரக அமைப்புகள் வலுவிழப்பதால் உங்களுடைய உடல், மனம் இரண்டும் புத்துணர்ச்சியுடன் உற்சாகத்துடன் இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள் எதுவும் வராது. தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி மனம் போல காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். சிலருக்கு கையில் இருந்த சேமிப்பு கரையும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தமாதம் உண்டு. வேறு இன மொழி மதக்காரர்கள் உதவியாக இருப்பார்கள். வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் உச்சத்தால் வலுவாக இருப்பதாலும், முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் செவ்வாய் இருப்பதாலும் எவ்வித சிக்கல்களும் வராமல் அனைத்தையும் ஜெயிப்பீர்கள். கலக்கங்கள் எதுவும் இன்றி நீங்கள் கலக்கும் மாதம்தான் இது. கடன் தொல்லைகளையும், வருமானக் குறைவையும், தொழில் சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது நிவர்த்திக்கப் படும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். 5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி அதிகாலை 5.40 வரையும், மாத பிற்பகுதியில் 28-ம் தேதி அதிகாலை 1.08 முதல் 1-ம் தேதி மதியம் 1.18 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.


துலாம்:

 மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் சுபத்துவ வலிமையுடன் இருப்பதால் துலாத்திற்கு நன்மைகள் நடக்கும் மாதம் இது. துலாம் ராசிக்காரர்களின் சிலர் இந்த மாதம் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றி பெறுவீர்கள். மனதில் இருப்பதை பிறருக்கு காட்டாமல் வேலைகளை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். துலாத்தினரின் திறமைகள் வெளிப்படுகின்ற மாதம் இது. உங்கள் செயல்களின் மூலம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெற்றி கொள்வீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குரு, செவ்வாய் இணைவதால் பணக் கஷ்டங்கள் இருக்காது. வெகுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது முடியும். வேற்றுமத நண்பர்கள் இப்போது கை கொடுப்பார்கள். தெய்வதரிசனம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். ஐந்தாமிடம் வலுப் பெறுவதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். சிலருக்கு பழைய கடனை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் மேன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான திருப்பங்கள் நடக்கும். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு. இதுவரை வேலை, தொழில் விஷயங்களில் செட்டில் ஆகாமல் இருப்பவர்கள் ஆறு மாதங்களில் நன்றாக இருக்கப் போவதற்கான அச்சாரம் போடுகின்ற மாதம் இது. வாக்குஸ்தானம் வலுப் பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் நல்ல மாற்றங்கள் நடக்கும். 2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி அதிகாலை 5.40 முதல் 5-ம்தேதி மதியம் 2.00 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.


விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாயும், யோகாதிபதி குருவும் இரண்டில் இணைவதால் விருச்சிகத்திற்கு அதிர்ஷ்டம் ஆரம்பிக்கும் மாதம் இது. அதிர்ஷ்டமான வார்த்தைகளையே வெகுகாலமாக நான் விருச்சிக ராசிக்கு எழுதவில்லை. இனிமேல் எழுதுவேன். விருச்சிகத்தின் முன்னேற்றங்கள் ஆரம்பிக்க இருக்கும் மாதம் இது. ஏழரைச் சனியினால் இதுவரை நடந்த எதிர்மறை பலன்கள் யாவும் விலகிக் கொண்டிருப்பதை இனி நீங்கள் உணர முடியும். இனிமேல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். 2020-ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம். எனக்கு ஒன்றும் சரியாக நடக்கவில்லையே என்று மனதிற்குள் குழம்பி கொண்டிருப்பவர்கள் கூட முயற்சிகளை செய்து வெற்றி காணும் மாதம் இது. குருபகவான் இரண்டில் இருப்பதால் உங்களில் சிலருக்கு சுப காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் உண்டு. சிலர் திருமணம் நடக்கப் பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் நிகழ்ச்சியாவது இந்த மாதம் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். நீண்டநாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து மனம் மகிழ உரையாடுவீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை மேம்படுத்துவீர்கள் புதிய நல்ல வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே வராது. எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள். மாத முற்பகுதியில் சூரியனும் சந்திரனும் வலுவாக இருப்பது தொழில் வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளுக்கு நல்ல பலனை அளிக்கும். கேது வலுப் பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தாதவர்கள் அவற்றை முடிப்பீர்கள். விருச்சிகம் இனிமேல் எதையும் சாதிக்கும் என்பதை நிரூபிக்கும் மாதம் இது. 1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி மதியம் 2.00 முதல் 7-ம் தேதி மாலை 6.24 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும், புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களையும் இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.


தனுசு:

 ராசிநாதன் குருவும், யோகன் செவ்வாயும் ராசியிலேயே இணைந்திருப்பதும், மாத ஆரம்பத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக அமைவதும் தனுசுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் பிப்ரவரி மாதம் உங்கள் வேதனைகளை விலக்கி முன்னேற்ற படிகளில் ஏற வைக்கும் மாதமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக எல்லா வகையிலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடிப்படைகள் ஆரம்பமாகும் மாதம் இது. . குரு, செவ்வாய் சுபத்துவ இணைவால் இந்த மாதம் தனுசுவினர் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லாத வண்ணம் சாதகமான, சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது உறுதி. ஜென்மச் சனி முடிந்து விட்டதால் சனி தந்த துயரங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இருக்காது. வருங்காலம் இனிமையாக இருக்கப் போகிறது. இனியெல்லாம் சுகம்தான். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்தும் கையை மீறிப் போகாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இளையவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை. வாழ்க்கைத் துணை மூலம் நன்மைகள் இருக்கும். சிலருக்கு துணை அமைவதற்கான ஆரம்பம் உண்டு. மனம் படிப்படியாக லேசாவதற்கான சம்பவங்கள் நடக்கும். கடன் தொல்லையால் கலங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. மேலதிகாரிகள் தொந்தரவுகள் இனிமேல் இருக்காது. வேலைப்பளு கம்மியாக இருக்கும். பணவரவிற்கு குறையில்லை. தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். வேலை, தொழில் போன்ற வருமானம் வரும் அமைப்புகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். குறிப்பாக குரு தசை, குரு புக்தி நடப்பவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழில் துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். 4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி மாலை 6.24 முதல் 9-ம் தேதி இரவு 7.43 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.


மகரம்:

 30 வயதுக்குட்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் அமைப்புகளில் நல்ல அனுபவங்களை தரும் மாதமாக பிப்ரவரி இருக்கும். மூன்று, பதினொன்றுக்கு உரிய குருவும், செவ்வாயும் லாபஸ்தானத்தில் இணைவதால் இதுவரை கிடைக்காத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெண்களிடம் உதவி கேட்டிருந்த இளையவர்களுக்கு இந்த மாதம் கேட்டது கிடைக்கும். ராசியில் சனியும் சூரியனும் இணைந்திருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சாதாரண விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. கடுமையான மனக்குழப்பத்தைத் தரும் ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் வந்திருக்கிறீர்கள் என்பதை இளைய பருவத்தினர் நினைவில் கொள்வது நல்லது. உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தினருக்கு வயதுக்கேற்ற வகையில் வேலை, காதல், நட்பு போன்றவற்றில் ஏமாற்றங்கள் இருக்கும். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தந்தையால் மருத்துவச் செலவுகள் இருக்கும். தந்தையால் விரையம், தந்தையே விரையம் என்ற கிரகநிலை உள்ளது. கவனம். இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. சிலருக்கு பார்த்து வந்த வேலையில் மாற்றம் அல்லது கம்பெனி மாற்றம் இருக்கும். இப்போது வரும் மாற்றம் எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும் என்பதால் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது. சிலர் வேலை விஷயமாக வடக்கு திசை நோக்கி போவீர்கள். என்னதான் இருந்தாலும் சனியே உங்கள் ராசிநாதன் என்பதால் தாங்க முடியாத துன்பம் எதுவும் தர மாட்டார். ஏழரைச்சனியால் சிலர் தேவையற்ற பழக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை திசை திருப்பக்கூடிய நட்புகள் அறிமுகமாகும். எதிலும் அக்கறையும் கவனமும் தேவை. வழக்கு, கடன் தொல்லைகள், மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளால் வேதனை போன்ற அவஸ்தைகளில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் மாதம் இது. 1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம் தேதி இரவு 7.43 முதல் 11-ம் தேதி இரவு 7.43 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.


கும்பம்:

 சூரியனும், புதனும் ராசியில் இருப்பதால் கும்ப ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற மனநிலையில் இருக்கின்ற மாதம் இது. சிலருக்கு எல்லா நிலைகளிலும் தயக்கங்களும், எதிலும் ஒரு குழப்ப நிலையும் இருக்கும். மாத பிற்பகுதியில் கிரகங்கள் சாதகமான அமைப்பில் மாறுவதால் இந்த மாதத்தின் 15-ம் தேதிக்கு பிறகு முன்னேற்றமான போக்கை எதிர் கொள்வீர்கள். எட்டுக்குடையவன் ராசியில் இருப்பதால் எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். சுக்கிரன் உச்சமடைவதால் பெண்களால் சந்தோஷங்களும், குறிப்பாக வேற்று மத, இன, மொழி இளம் பெண்களால் சுகங்களும் இருக்கும். இந்த மாதம் கடன் பிரச்னைகள் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் கடன் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள். தேவையற்ற செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம். கணவன், மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின் கோள்மூட்டலை நம்பி ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள். செய்யும் வேலையில் லாபங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற அமைப்பும் உண்டு. இன்னும் சிலருக்கோ அலைச்சல்கள்தான் மிச்சம். காரியம் கை கூடவில்லை என்ற மனத்தாங்கல்களில் இருப்பீர்கள். ராசி வலுவாக இருப்பதால் அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும். பொதுஇடத்தில் மதிப்பும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். என்னதான் பிரச்னை என்றாலும் சுக்கிரனும் புதனும் வலுவாக இருப்பதால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து எல்லாவற்றையும் தனி ஆளாக நீங்கள் ஒருவரே சமாளிப்பீர்கள் என்பது உறுதி. பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும். 3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம்தேதி இரவு 7.43 முதல் 13-ம் தேதி இரவு 8.22 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.


மீனம்:

 மீனத்திற்கு குறை சொல்ல முடியாத மாதம் இது. கோட்சார நிலையில் கிரகங்கள் அதிர்ஷ்டங்களை தரும் அமைப்பில் இருப்பதால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு கிடைக்க இருக்கின்ற நன்மைகளை அடையாளம் காட்டும் விதமாக பிப்ரவரி மாதம் இருக்கும். ராசிநாதன் குரு வலுவான நிலையில் பத்தாமிடத்தில் ஆட்சியாக இருந்து ஆறாமிடத்தைப் பார்ப்பதால் தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருந்த எதிரிகளின் கொட்டம் ஒடுங்கும். ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்கள் கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு ஆகியவற்றை சுலபமாக ஜெயிப்பீர்கள். இந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் இருக்காது. ராசியில் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை, நிறைவான லாபம் இப்போது மீனத்திற்கு உண்டு. பெண்களால் லாபமும், உதவியும் இருக்கும், பெண்கள் வலிய வந்து உதவுவார்கள். சிலரிடம் பெண்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள். அவரவர் தகுதிக்கேற்ப நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த உபயோகமான பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள். விரய ஸ்தானம் என்று சொல்லப்படும் பனிரெண்டாமிடம் சுபத்துவ அமைப்பில் இருப்பதால் செலவு செய்து நல்லவைகளை நீங்கள் அடையும் மாதம் இது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்ப வராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும். பெண்களுக்கு சிறப்பான மாதமிது. கணவரும் குழந்தைகளும் உங்களின் பேச்சை கேட்பார்கள். வயதானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். 1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி இரவு 8.22 முதல் 15-ம் தேதி இரவு 11.18 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

Bottom Ad [Post Page]

| Designed by idea X Technology